தூய்மை இந்தியா இயக்கம் இந்தியா முழுவதும், கரிமக் கழிவுகள் எரிபொருள், மின்சாரம், மதிப்புமிக்க உரமாக மாறுகின்றன. அக்டோபர் 2014-ல் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் , நகர்ப்புற திடக்கழிவுகளின் அறிவியல் பூர்வமான மேலாண்மை ஒரு முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த இயக்கம் வளர்ச்சியடைந்தபோது, எரிபொருள்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு மதிப்புமிக்க வளமாக கரிமக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்டன. கரிமக் கழிவுகளின் பயன்கள் கரிமக் கழிவுகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உயிரி வாயு, மிகவும் சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த சமையல் எரிபொருட்களில் ஒன்றாகும். இதன் துணைப் பொருளான சாணக் கூழ், நைட்ரஜன் சத்து நிறைந்த சிறந்த இயற்கை உரமாகவும் செயல்படுகிறது. இது ரசாயன உள்ளீடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, செலவுகளைக் குறைத்து, மண் வளத்தைப் பராமரிக்க உதவுகிறது. புதுமையான அணுகுமுறைகள் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி இந்தியா முழுவதும் பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு காய்கறிச் சந்தை, அழுகிய காய்கறிகளைக் கொண்டு தெருவிளக்குகளை ஒளிரச் செய்கிறது. பிரயாக்ராஜில், பலவகை மூலப்பொருட்களைக் கொண்ட ஒரு பயோ-சிஎன்ஜி ஆலை, பல்வேறு வகையான கரிமக் கழிவுகளைத் தூய்மையான எரிபொருளாகவும் உரமாகவும் மாற்றுகிறது. காந்திநகரில் உள்ள ஒரு கல்வி நிறுவனம், எல்பிஜி சிலிண்டர்களைச் சார்ந்திருக்காமல், ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்டவர்களுக்குச் சமைக்கிறது. குவாலியரில் உள்ள ஒரு கோசாலை, மாட்டுச் சாணத்தை அழுத்தப்பட்ட உயிரிவாயுவாக மாற்றுகிறது. வெவ்வேறு மூலப்பொருட்கள், வெவ்வேறு அளவுகள் என்றாலும் இதன் அடிப்படையான மாற்றம் ஒன்றுதான். இந்த முயற்சிகள், நிலைத்தன்மையை நோக்கிய பயணத்தில் நகரங்களும் நிறுவனங்களும் எவ்வாறு முன்னோடிகளாக உருவெடுத்து வருகின்றன என்பதைக் காட்டுகின்றன. கழிவு மேலாண்மையில் புதுமையான, சுழற்சி முறையிலான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அவை சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, கழிவுகளை ஒரு வளமாகக் கருதி அதன் மதிப்பை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவின் நகரங்கள், வளாகங்கள், கோசாலைகள், சந்தைகள் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகள் பெருகும்போது, இந்த அணுகுமுறை விரிவடையும். தூய்மையான எரிசக்தியை உருவாக்குவது முதல் இயற்கை வேளாண் நடைமுறைகளை ஊக்குவிப்பது வரை, இந்த முயற்சிகள் நகர்ப்புற இந்தியாவிற்கான ஒரு சிறந்த பாதையை எடுத்துக்காட்டுகின்றன. இதில் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மை, சமூகப் பங்கேற்பு, தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவை ஒன்றிணைகின்றன. இதன் மூலம் தூய்மையான, பசுமையான, அதிக தன்னிறைவு பெற்ற நகரங்கள் உருவாகும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315501®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்