காற்றாலை எரிசக்தியின் பங்களிப்பு தூய்மையான, நிலையான எரிசக்தியுடன் கூடிய எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு காற்றாலை எரிசக்தி முக்கிய உந்துசக்தியாக உள்ளது. 2026 செப்டம்பர் 30 நிலவரப்படி, நாட்டின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 299.25 ஜிகாவாட்டாக உள்ள நிலையில், இதில் காற்றாலை மின்சாரம் சுமார் 19.8% பங்களிப்புடன் 59.20 ஜிகாவாட்டாக உள்ளது. 2014 மார்ச் மாதத்தில் 21 ஜிகாவாட்டாக இருந்த நிறுவப்பட்ட காற்றாலை மின்திறன், 2026 செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 2.8 மடங்கு அதிகரித்துள்ளது. நிறுவப்பட்ட காற்றாலை மின்திறனில் உலகளவில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. காற்றாலை மின் உற்பத்தித் திறன் நாட்டில் தரைமட்டத்திலிருந்து 120 மீட்டர் உயரத்தில் 695.5 ஜிகாவாட்டும், 150 மீட்டர் உயரத்தில் 1,163.9 ஜிகாவாட்டும் காற்றாலை மின் உற்பத்தித் திறன் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் காற்றாலை மின் உற்பத்திக்கு அதிகப்படியான வளங்கள் உள்ளது. காற்றாலை மின் உற்பத்திக்கான வளங்களைக் கண்டறிய, தேசிய காற்றாலை எரிசக்தி நிறுவனம் நாடு முழுவதும் 900-க்கும் மேற்பட்ட காற்று கண்காணிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. இந்த வலுவான அடித்தளம், 2030-க்குள் 100 ஜிகாவாட் திறனையும், 2036-க்குள் 156 ஜிகாவாட் திறனையும் எட்டுவதற்குப் பெரிதும் துணைபுரிகிறது. 2025-26 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக, 6.05 ஜிகாவாட் காற்றாலை மின் திறன் இணைக்கப்பட்டதுடன், 106.7 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், காற்றாலை டர்பைன் உற்பத்தித் திறன் 2014-ல் 10 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், 2026 மார்ச் நிலவரப்படி சுமார் 24 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதுடன், முக்கிய உதிரிபாகங்களில் 70 முதல் 80% வரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கடலோரக் காற்றாலைத் திட்டங்கள் கடலோரக் காற்றாலைத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், குஜராத், தமிழ்நாடு கடற்கரையோரங்களில் தலா 500 மெகாவாட் வீதம் 1,000 மெகாவாட் திறன் கொண்ட கடலோரக் காற்றாலைத் திட்டங்களுக்கு ரூ.6,853 கோடி நிதி உதவிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒழுங்குமுறை, நிலம், மின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் நிலவும் சவால்களுக்குத் தீர்வு காண 2026 ஜனவரியில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் விதிகள், அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள், உற்பத்தியாளர்கள் பட்டியல் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளன. சர்வதேச ஒத்துழைப்பு காற்றாலை எரிசக்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த பிரிட்டன், டென்மார்க், பெல்ஜியம், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. 2026 பிப்ரவரியில் இந்தியா-பிரிட்டன் கடலோரக் காற்றாலை பணிக்குழு தொடங்கப்பட்டதுடன், டென்மார்க்குடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வலுவான கொள்கை ஆதரவு, நவீன மின் கட்டமைப்பு, எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள மூலம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் காற்றாலை எரிசக்தி தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337735®=48&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்