பசுமை ஹைட்ரஜனின் முக்கியத்துவம் இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றத்தில் பசுமை ஹைட்ரஜன் மிக முக்கியத் தூணாக உருவெடுத்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பசுமை ஹைட்ரஜன், கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக அதிக வெப்பம், ரசாயன செயல்முறைகள் தேவைப்படும் உர உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு, இரும்பு & எஃகு தயாரிப்பு, கனரக போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த இது சிறந்த தீர்வாக விளங்குகிறது. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் 2023 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள வரையறையின்படி, ஒரு கிலோ ஹைட்ரஜன் உற்பத்திக்கு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு இரண்டு கிலோவுக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே அது பசுமை ஹைட்ரஜனாகக் கருதப்படுகிறது. 2023 ஜனவரியில் ரூ.19,744 கோடி மதிப்பீட்டில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2030-க்குள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை எட்டுவதை இந்த இயக்கம் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ரூ.17,490 கோடி நிதியுடன் செயல்படுத்தப்படும் மாற்றத்திற்கான உத்திசார் நடவடிக்கைகள் திட்டத்தின் கீழ், 15 நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின்னாற்பகுப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. 2026 பிப்ரவரி நிலவரப்படி சுமார் 8,000 டன் உற்பத்தித் திறன் கட்டமைப்பு செயல்பாட்டிற்கு வந்துள்ளதுடன், ஆண்டுக்கு 8,62,000 டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனுக்கான ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பசுமை ஹைட்ரஜன் மையங்களும் ரயில் சேவையும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், குஜராத்தின் தீன்தயாள் துறைமுகம், ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் ஆகியவை முக்கிய பசுமை ஹைட்ரஜன் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2026 ஜூலை 17 அன்று ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலின் இயக்கத்தின் போது நீராவியும் வெப்பமும் மட்டுமே உமிழப்படுகிறது. முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பலன்கள் மேலும், எஃகு துறையில் ஐந்து முன்னோடி திட்டங்களுக்கும், 70 ஹைட்ரஜன் வாகனங்களை இயக்க 12 திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் மூலம் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களுக்கான செலவில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை மிச்சமாவதுடன், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு தவிர்க்கப்படும். நிகர பூஜ்ய உமிழ்வை நோக்கி இந்தியா இந்த முன்னெடுப்புகள் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, 2070-க்குள் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329321®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்