சூரியசக்தித் துறையின் அபரிமிதமான வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரியசக்தித் துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று, நாட்டின் எரிசக்தி மாற்றத்தின் முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்துள்ளது. 2014-ம் ஆண்டில் 2.82 ஜிகாவாட்டாக இருந்த நிறுவப்பட்ட சூரியசக்தி திறன், சுமார் 62 மடங்கு அதிகரித்து 2026 அக்டோபர் 31 நிலவரப்படி சுமார் 175 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் 37 ஜிகாவாட் சூரியசக்தித் திறனை இணைத்ததன் மூலம், வருடாந்திர திறன் சேர்க்கையில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய சூரியசக்தி வளர்ச்சிச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு & கண்காட்சி 2026 நவம்பர் 2 முதல் 5 வரை புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு & கண்காட்சியில் (Bharat Renewable Energy Summit & Expo (BRESE) 130-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியாவின் சூரியசக்தித் துறை வளர்ச்சி முக்கிய இடம்பிடித்தது. வலுவான கொள்கை கட்டமைப்பு, போட்டி ஏல முறைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இந்த விரிவாக்கத்திற்கு அடித்தளமிட்டுள்ளன. 2025-26 நிதியாண்டில் 44.61 ஜிகாவாட் சூரியசக்தித் திறனும், நடப்பு நிதியாண்டில் இதுவரை 24.29 ஜிகாவாட் திறனும் இணைக்கப்பட்டுள்ளது. சூரியசக்திக்கான வளர்ச்சித் திட்டங்கள் சூரியசக்திப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ், 2026 அக்டோபர் நிலவரப்படி 39,461 மெகாவாட் திறன் கொண்ட 56 பூங்காக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தானில் உள்ள 2,245 மெகாவாட் திறன் கொண்ட பத்லா சூரியசக்திப் பூங்கா உலகின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும், 2026 ஜூலை 31 அன்று ரூ.5,070 கோடி மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட பிரதமரின் சூரிய சரோவர் திட்டம், எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய 5,000 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தித் திட்டங்களை ஊக்குவிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் வகையில், உயர் திறன் கொண்ட சூரியசக்தி தொகுதிகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் ரூ.35,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதோடு, சூரியசக்தி தொகுதி உற்பத்தித் திறன் 2026 ஜூன் மாதத்தில் 192 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. வீடுகள், விவசாயிகளுக்குச் சூரியசக்தியைக் கொண்டு செல்லும் வகையில், ரூ.75,021 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் (PM Surya Ghar: Muft Bijli Yojana) கீழ், 2026 நவம்பர் நிலவரப்படி சுமார் 65 லட்சம் வீடுகளில் சூரியசக்தி அமைப்புகள் நிறுவப்பட்டு, 21 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பூஜ்ஜிய மின்கட்டணப் பயனைப் பெற்றுள்ளன. அதேபோல், பிரதமரின் விவசாயிகளுக்கான சூரியசக்தி திட்டத்தின் [Pradhan Mantri-Kisan Urja Suraksha Evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)] மூலம், 2026 செப்டம்பர் 30 நிலவரப்படி, சுமார் 11.91 லட்சம் சூரியசக்தியில் இயங்கும் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச சூரியசக்தி கூட்டணி சர்வதேச சூரியசக்தி கூட்டணி [International Solar Alliance (ISA)], ஒரே சூரியன் ஒரே உலகம் ஒரே தொகுப்பு [One Sun One World One Grid (OSOWOG)] ஆகிய முன்முயற்சிகள் மூலம் உலகளாவிய தூய்மை எரிசக்தித் துறை ஒத்துழைப்பிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2030-க்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தித் திறனை எட்டுதல், 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைதல் ஆகிய உறுதிமொழிகளை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் சூரியசக்தி முக்கியத் தூணாகத் திகழ்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337251®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்