நீர்மின் திட்டங்கள் இந்தியாவின் மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள் ஆகிய இடங்களில் மின்சார வசதியை மேம்படுத்தும் நோக்கில், சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களை (Small Hydro Power) விரிவுபடுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக 2026-27 முதல் 2030-31 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2,584.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களின் முக்கியத்துவம் ஆறுகள், கால்வாய்களில் இயற்கையாகப் பாயும் நீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதே நீர்மின் உற்பத்தியாகும். நிறுவப்பட்ட மொத்த மின் உற்பத்தித் திறன் 25 மெகாவாட் வரை உள்ள திட்டங்கள் சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. 25 மெகாவாட்டுக்கு அதிகமான திறன் கொண்ட பெரிய நீர்மின் திட்டங்கள் மின்சார அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. இந்தியாவில் சிறிய அளவிலான நீர்மின் உற்பத்திக்கு 7,133 இடங்களில் வாய்ப்பு இருப்பதாகவும் இவற்றில் மொத்தம் 21,134 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை சுமார் 5,182 மெகாவாட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மொத்த வாய்ப்பில் சுமார் 25 சதவீதம் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 15,952 மெகாவாட் திறனைப் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நிதியுதவியும் வேலைவாய்ப்பும் வடகிழக்கு மாநிலங்கள், எல்லைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் ஆகியவற்றில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு, ஒரு மெகாவாட்டுக்கு ரூ.3.6 கோடி அல்லது திட்டச் செலவில் 30 சதவீதம், இதில் எது குறைவோ அது நிதியுதவியாக வழங்கப்படும். ஒரு திட்டத்துக்கு அதிகபட்சம் ரூ.30 கோடி வழங்கப்படும். மற்ற பகுதிகளில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு, அவற்றின் அளவு, அமைவிடத்தைப் பொறுத்து ஒரு மெகாவாட்டுக்கு ரூ.2.4 கோடி, ரூ.1.78 கோடி அல்லது ரூ.2.054 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும். திட்டச் செலவில் 20 சதவீதம் அல்லது மேற்கண்ட தொகை, இதில் எது குறைவோ அது வழங்கப்படும். ஒரு திட்டத்துக்கு அதிகபட்சம் ரூ.20 கோடி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான நீர்மின் உற்பத்தித் துறையில் சுமார் ரூ.15,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 200 புதிய திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க ரூ.30 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்களைக் கட்டமைக்கும் காலத்தில் சுமார் 51 லட்சம் மனித வேலைநாட்கள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகும் அவற்றைப் பராமரிப்பது, இயக்குவது ஆகிய பணிகள் மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கும் இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியும் விநியோகக் கட்டமைப்பும் வலுப்பெறும். மின்சாரத் துறைக்கு கிடைக்கும் நன்மைகள் சிறிய அளவிலான நீர்மின் உற்பத்தி நிலையங்கள், மின்சாரம் தேவைப்படும் பகுதிகளுக்கு அருகிலேயே அமைக்கப்படுவதால், நீண்ட தொலைவுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதில் ஏற்படும் மின் இழப்புகள் குறையும். மின் அழுத்த நிலைத்தன்மையும் மேம்படும். எரிபொருள் தேவையின்றி, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாமல் மின்சாரம் தயாரிக்க முடியும். தடையற்ற மின்சார விநியோகத்துக்கும் மின் கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கும் இத்திட்டங்கள் உதவும். குறைந்த நிலப்பரப்பே தேவைப்படுவதால், பெரிய அளவிலான நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் குறையும். மக்களின் குடியிருப்புகளை மாற்ற வேண்டிய சூழலும் மிகக் குறைவாக இருக்கும். நீண்டகாலம் செயல்படக்கூடிய இத்திட்டங்கள் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரியும். மாநில வாரியான நீர்மின் உற்பத்தி வாய்ப்புகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் 8,030 மெகாவாட், தெற்குப் பகுதியில் 5,490 மெகாவாட், வடகிழக்குப் பகுதியில் 2,995 மெகாவாட், மேற்குப் பகுதியில் 2,912 மெகாவாட், கிழக்குப் பகுதியில் 1,707 மெகாவாட் என மொத்தம் 21,134 மெகாவாட் சிறிய அளவிலான நீர்மின் உற்பத்திக்கு வாய்ப்புகள் உள்ளன. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் 604 மெகாவாட் உற்பத்தி வாய்ப்புகள் உள்ளன. மற்ற பகுதிகளைவிட தென் மண்டலத்தில் ஏற்கெனவே அதிக அளவில் இத்திறன் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களின் செயல்பாடு ஆற்றின் இயற்கையான நீரோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக ஆற்றின் ஒரு பகுதி நீரானது, கால்வாய்கள், குழாய்கள் ஆகியவை வழியாக விசையாழிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மின்சாரம் தயாரித்த பிறகு மீண்டும் நீர் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது. பாசனக் கால்வாய்களில் உள்ள நீர்மட்ட வேறுபாடு, அணைகளின் அடிப்பகுதியில் கிடைக்கும் நீரின் அழுத்தம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்க முடியும். ஏற்கெனவே உள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதால் செலவையும் குறைக்க முடியும். மொத்தத்தில், சிறிய அளவிலான நீர்மின் உற்பத்தித் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு, தொலைதூரப் பகுதிகளுக்கும் நம்பகமான மின்சார வசதியை வழங்க முடியும். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் எரிசக்தித் தன்னிறைவை மேம்படுத்துவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339965®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்